தொல்பொருள் ஆராய்ச்சியில் இருக்க வேண்டிய ஆள், கேத்தன் மேத்தா. கேமராவை பார்த்தால் இவருக்கு சரித்திரம் மட்டுமே கண்களுக்கு தெரிகிறது. புரியவில்லை?அமீர்கானை மீசை, தலைமுடி வளர்க்க வைத்து மங்கள் பாண்டே ஆக்கிய அசகாய சூரர் இவர். " 'மங்கள் பாண்டே' படத்தை இயக்கியபோது கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. படம் உள்நாட்டில் சுமாராக போனாலும், வெளிநாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றது." வெளிநாட்டு விவகாரம் உள்ளூர்க்காரர்களுக்கு எங்கே தெரியப்போகிறது என இஷ்டத்துக்கு எடுத்து விடுகிறார் மேத்தா.
'மங்கள் பாண்டே'க்கு பிறகு மேத்தாவின் பார்வை வீரத்தின் ஆத்தா ஜான்சி ராணி மீது திரும்பியுள்ளது. "இந்திய பெண்கள் என்றால் மென்மையானவர்கள், எதையும் எதிர்க்கும் துணிவில்லாதவர்கள் என்று வெளிநாட்டில் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், வீரத்தில் இந்திய பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை வெளிநாட்டவர்களுக்கு புரியவைக்கும் விதமாக எனது 'ஜான்சி ராணி' இருக்கும்." புதிய வேடத்துக்கு சரித்திர பின்னணியுடன் விளக்கம் தருகிறார் கேத்தன் மேத்தா.
ஜான்சி ராணியாக நடிக்க இவர் தேர்ந்தெடுத்திருப்பது ஐஸ்வர்யாராய். புலி வேஷத்துக்கு புள்ளிமானா?
"எல்லோரும் இதையேதான் கேட்கிறார்கள். ஆனால் படம் வந்தபிறகு பாருங்கள், ஜான்சி ராணி வேடத்திற்கு ஐஸ்வர்யாராயை தவிர வேறுயாரும் பொருத்தமாக இருக்கமாட்டார்கள் என்று சொல்லப்போகிறீர்கள்." உலகமகா நம்பிக்கை மேத்தாவுக்கு!
வீரமங்கை ஜான்சி ராணி வேஷத்தில் ஒரு பேன்சி ராணி.... நல்லவேளை அந்த ராணி இன்று உயிருடன் இல்லை!
|