கழுகு - விமர்சனம்
அலிபாபா, கற்றது களவு…படத்திற்கு பின் கிருஷ்ணா ட்ரிபிள் ஷாட் அடித்திருக்கும் படம் கழுகு.
கொடைக்கானலில் மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்பவர்களின் உடல்களை மீட்டு உறவுகளிடம் ஒப்படைக்கும் தொழிலை செய்து வருபவர் கிருஷ்ணா. கருணாஸ், தம்பி ராமையா அப்புறம் ஊமையனாக வரும் ஒரு புதுமுகம் ஆகிய மூவரும் கிருஷ்ணாவின் சகாக்கள்.
அடுத்தவர் மரணத்தை மரத்துப்போன மனசுடன் பார்க்கும் கிருஷ்ணாவுக்குள் பூக்கிறது பிந்துமாதவியுடனான காதல். பைபாஸ் ரோட்டில் பறக்கும் பஸ் போல காதல் டிராக், சட்டென்று முடிகிறது கல்யாணத்தில். சந்தோஷமாக வாழ்க்கையைத் துவங்கும் நேரத்தில் எதிர்பாராத ஒரு நிகழ்வு அவரது புத்தம்புது வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது. அது……. க்ளைமாக்ஸ்.
மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்பவர்களின் பிணங்களைத் தூக்கிவந்து அதற்கு கூலியாக கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கையை நடத்தும் இளைஞன் சேராவாக நடித்திருக்கும் கிருஷ்ணா. தனது முந்தைய படங்களைவிட இதில் மிகவும் கடுமையான உழைப்பைக் காட்டியிருக்கிறார்.
இன்றைக்கு யாராவது மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளமாட்டார்களா என்று எதிர்பார்ப்பது, அப்படிக் கிடைக்கும் உடல்களிலிருந்து நகை, பணம் என கிடைத்தவரை சுருட்டி நண்பர்களுடன் பங்கிட்டுக் கொள்வது, தழைகீழாக கயிற்றைக் கட்டிக்கொண்டு பள்ளத்தாக்கில் இறங்குவது என பிணம் தூக்குபவர்களின் அவல வாழ்க்கையைக் தத்ரூபமாக பிரதிபலித்திருக்கிறார் .
பிந்துமாதவியின் காதலை ஆரம்பத்தில் அலட்சியப்படுத்துவது, பின்னர் அவரது உண்மையான அன்பைப் புரிந்துகொண்டு அவரைத் திருமணம் செய்து கொள்வது, கடைசியில் பிந்துமாதவியின் மரணத்தைக் கண்டு அவர் எடுக்கும் முடிவு என தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்துள்ளார் கிருஷ்ணா.
கவிதாவாக வரும் பிந்துமாதவிவிக்கு பல இடங்களில் கண்களால் பேசும் வாய்ப்பு. அதை சரியாகவே பயன்படுத்தி, சராசரி மதிப்பெண்ணை தாண்டிவிடுகிறார். கிருஷ்ணாவுக்கு விபத்து என்றதும் பதறிப்போகும் காட்சியில் தனது காதலின் ஆழத்தை அருமையாக வெளிப்படுத்தியிருக்கும் பிந்துமாதவி. இறுதிக்காட்சியில் நம்மை உறையவைத்து விடுகிறார்.
கிருஷ்ணாவின் நண்பனாக நண்டு என்கிற கதாபாத்திரத்தில் கருணாஸும் சித்தப்பாவாக வரும் தம்பி ராமையாவும் சீரியசான திரைக்கதையில் தேவையான இடங்களில் நகைச்சுவைப் பூக்களைத் தூவியிருக்கிறார்கள்.
இறந்த உடலில் இருந்து திருடிய நகையை தனது மனைவியிடம் பரம்பரை நகை என்று கதைவிடும் இடத்தில் கருணாஸ் சிரிக்கவைக்கிறார்.
கிருஷ்ணாவின் திருமணத்திற்காக ஸ்டூடியோவிலிருந்து கோட் ஒன்றை சுட்டுக்கொண்டு வரும் காட்சியில் தம்பி ராமையா ரசிக்கவைக்கிறார்.
லாரிகளில் அனுப்பப்படும் டீத்தூளை வழிமறித்துக் கொள்ளையடித்து அதனைத் தனது கம்பெனி தயாரிப்பாக விற்பனை செய்யும் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் ஜெயபிரகாஷ். கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார்.
க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் ரமேஷ் த்ரில் ஏற்றுகிறார். லொகேஷனுக்கு ஏற்றதுபோல கச்சிதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.சத்யா.
பிணம் தூக்கிகளின் வாழ்க்கை என்ற வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்திருக்கும் விதத்தில் இயக்குனர் சத்யசிவா பாராட்டுக்குரியவர் என்றாலும். படத்தின் பல இடங்களில் லாஜிக் குறைபாடுகள் தென்படுவதால் ஆர்ட்டிபிஷியலான பீலிங்கே மிச்சமாகிறது.
|
Wow...
|
Buss...
|
|
தமிழ் சினிமா இதுவரை தொடாத கதைகளம்
கிருஷ்ணாவின் நடிப்பு
சண்டை பயிற்சி, ஒளிப்பதிவு
|
இடவேளைக்கு பிறகு ஜவ்வாகும் திரைக்கதை
|